அண்ணல் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி மாநகராட்சி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மறைந்த கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், “உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.
மாவட்டத்தைப் பொறுத்தவரை எனது தந்தை இந்த தொகுதி மக்களுக்காக செய்த சமூக, அரசியல் பணிகளை தொடர்ந்து செய்வேன். எனது தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப பொதுமக்களுக்கு சேவை ஆற்றுவேன். எனது தந்தை விட்டுச்சென்ற பணிகளை நான் தொடர்ந்து செய்ய உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து அவர் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு அவரது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க...விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் பிரதமர் மோடி - சோனியா காந்தி குற்றச்சாட்டு