குமரியில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, தேவர கட்டு சரஸ்வதி தேவி, குமாரகோவில் முருகன் ஆகிய சாமி விக்ரகங்கள் மன்னர் காலம் முதல் கேரள அரசால், கோட்டைக்கு நவராத்திரி விழாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த சாமி விக்ரகங்கள், பத்மநாபபுரத்தில் இருந்து காவல் அணிவகுப்புடன், மன்னரின் உடைவாள் ஏந்தி யானை மீதும், பல்லக்கின் மீதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.
குமரி முதல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை வழிநெடுக சாமி விக்ரகங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கரோனா தொற்றைக் காரணம் காட்டி ஊர்வலம் குறித்து பல்வேறு கருத்துக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதனால் ஊர்வலம் நடக்குமா? நடக்காதா? என பக்தர்கள் மன வேதனையில் உள்ளனர்.
எனவே இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு ஒவ்வொரு ஆண்டும் எவ்வாறு பாரம்பரிய முறைப்படி இந்த விழா நடைபெறுகிறதோ அதேபோன்று இந்த ஆண்டும் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இந்து அமைப்புகள், தக்கலைப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு இந்து ஆலய பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் தெய்வ பிரகாஷ், பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிரி, அலெக்சா, கூகுள் போன்ற வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூலம் அரசு இ-சேவை!