கன்னியாகுமரி: திரைப்பட சண்டைப் பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநிலச் செயலாளருமான கனல் கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். அதில் கிறிஸ்தவ மத போதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோ அதன் பின்னணியில் தமிழ் திரைப்படப் பாடலும் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.
மேலும், அதில் வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான், மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள் என்ற வார்த்தையுடன் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோ ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இதனைப் பார்த்த கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த ஆஸ்டின் பெனட் (54) என்பவர் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அதில் கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் அவதூறாக வீடியோ வெளியிட்டுள்ளதை குறிப்பிட்டு புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் 295 (மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது) 505/2 (பிரிவினையை ஏற்படுத்துவது) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சுமார் 8 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அவர் அவசர அவசரமாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவ்வாறு கனல் கண்ணன் அவசரம் அவசரமாக கைது செய்யப்பட்டதாக, அதனை கண்டித்து நேற்று நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், ‘15 நிமிடத்தில் விசாரணை செய்துவிட்டு அனுப்பி விடுவதாக கூறிவிட்டு கனல் கண்ணனை கைது செய்தது துரோகமான செயல். பிரதமர் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், எந்த தவறும் செய்யாத கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுத்தது பழிவாங்கும் செயல்.
எனவே, தமிழ்நாடு அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக, இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத் போன்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.