கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழை இன்று பகல் பொழுதிலும் நீடித்தது.
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றம் அதிகரிக்கும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்து நிலையில், குமரி மேற்கு கடற்கரைப் பகுதிகளில் கடல் வழக்கத்தை விட ஆக்ரோஷமாக காணப்பட்டது.
இதனால் நாட்டுப்படகை பயன்படுத்தும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நீரோடி பகுதியில் கடல் அலையால் கடந்த ஓராண்டுக்கு முன் மீன்வர்களால் கட்டப்பட்ட ஐந்து லட்சம் மதிப்பிலான கட்டிய மீன் விற்பனைத் தலம் முற்றிலும் சேதமடைந்தது.
மேலும் தடுப்புச் சுவரையும் தாண்டி பல்வேறு வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். அதே போல கடலோர கிராமங்களை இணைக்கும் சாலைகள் மழையால் துண்டிக்கப்படும் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.