கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்துவந்த நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று (அக்டோபர் 13) காலை முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
நாகர்கோவில் பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, புத்தேரி, தாழக்குடி, கொட்டாரம் போன்ற பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. மலையோரப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு 1,700 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை இன்று இரவுக்குள் 40 அடியை எட்டும் எனப் பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக மாவட்டத்தில் சுருளோடு பகுதியில் ஐந்து சென்டி மீட்டர் மழையும், கன்னிமாரில் நான்கு சென்டி மீட்டர் மழையும், கொட்டாரத்தில் 3.5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்துவருவதால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீதோஷண நிலை காணப்படுகிறது. மேலும், தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.