குமரி மாவட்டத்திற்கு அதிக மழைப் பொழிவைத் தரும் தென்மேற்கு பருவமழை சனிக்கிழமை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் மாவட்டத்தின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள கோதையாறு, பரளியாறு, தாமிரவருணியாறு, வள்ளியாறு, முல்லையாறு, பழையாறு, மாசுபதியாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதில் குறிப்பாக பேச்சிப்பாறை அணைக்கு வரும் கோதையாற்றிற்கும், பெருஞ்சாணி அணைக்கு வரும் பரளியாற்றிலும், சிற்றாறு அணைகளுக்கு வரும் சிற்றாறுகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோதையாற்றில் வெள்ளம் அதிகரித்துள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.