கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 52ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். கூடன்குளம் அணுமின் நிலைய தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அஜய் துபே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இப்பட்டமளிப்பு விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை என சுமார் 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அப்போது உரையாற்றிய டாக்டர் அஜய்துபே, “மாணவ மாணவிகள் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவிகள் இந்த அளவுக்கு உயர உறுதுணையாக இருந்த தங்கள் பெற்றோருக்கு முதலில் நன்றி செலுத்த வேண்டும்.
இந்த சமுதாயத்தில் அனைவரும் போற்றத்தக்க வகையிலும், பாராட்டும் வகையிலும் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். அனைவரிடமும் தனித் தனித் திறமைகள் நிறைந்திருக்கும், அதை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் மாணவ-மாணவிகள் தற்போதுள்ள தொழில்நுட்பத்தை தங்களின் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் அறிவியல் முன்னேற்றம் உள்ளது. அதே நேரத்தில் பிரச்சினைகளும் பல உள்ளது.
எனவே தற்போதுள்ள சமுதாயத்தில் தகவல் தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பேராசிரிய பேராசிரியைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர் ஆப்சென்ட்?