குமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த அருகுவிளை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (43). இவர் திருச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலைப்பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வளர்மதி (38). இந்த நிலையில் இன்று (டிச.01) மாலை செந்தில்குமார் தனது மனைவி வளர்மதியுடன் இருசக்கர வாகனத்தில் பொருள்கள் வாங்குவதற்காக வெளியே சென்றார்.
இவர்களது வாகனம் செட்டிக்குளத்தை அடுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக இவர்களின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பேருந்தின் பின் சக்கரத்தில் வளர்மதி சிக்கினார்.
இதில் படுகாயமடைந்த வளர்மதியை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அரசு மருத்துவமனையில் வளர்மதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நாகர்கோவில் போக்குவரத்துப் புலனாய்வு காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:தனியார் கல்குவாரி, கல் அரவை தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்