கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூரிலிருந்து நாகர்கோவில் நோக்கி இன்று (நவம்பர் 6) மாலை அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்து புத்தேரி மேம்பாலம் அருகில் வந்துக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்தை நோக்கி கல்லெறிந்தார். இதில் பேருந்து கண்ணாடி உடைந்து சேதமானது.
இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த வடசேரி காவல்துறையினர் அப்பகுதியை சுற்றி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பேருந்து மீது எறிந்த கல்லும் அதன் அருகே பாஜக கொடியும் கிடந்துள்ளது. அதனை சேகரித்த காவல்துறையினர் பேருந்தை வேண்டுமென்ற தாக்கினார்களா? அல்லது வேறு எதும் சதிதிட்டம் இதன் பின் உள்ளதா? வேண்டுமென்றே பாஜக கொடியை அங்கு விட்டுசென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கல்வீசிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
நல்வாய்ப்பாக இந்த தாக்குதலில் பேருந்தில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.