கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நெசவுத் தொழிலாளியாக வாழ்ந்த சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஞானப்புகழ்ச்சி பாடல் பாடும் நிகழ்ச்சி நேற்றிரவு தொடங்கி விடியும்வரை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் குடும்பத்தோடு பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பிறந்த பீர்முகம்மது என்பவர் இஸ்லாமிய கோட்பாடுகள் மீதான பற்றால் ஆன்மீக பயணமாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வாழ்ந்து நெசவு தொழிலில் ஈடுபட்டதோடு தன் ஆழ்ந்த இலக்கிய அறிவால் ஞானப்புகழ்ச்சி, ஞானப்பூட்டு, ஞானப்பால், ஞானமணிமாலை என 18,000 பாடல்களை உள்ளடக்கிய 14 நூல்களை எழுதி சூபி கவிஞர் என புகழ்பெற்றார்.
இவர், தக்கலையில் சமாதியான இடத்தில் தர்கா அமைக்கப்பட்டு தமிழ்நாடு, கேரள இஸ்லாமிய மக்களால் வழிபடப்பட்டுவருகிறது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் நினைவு பெருவிழா நடைபெற்று வரும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அவரால் இயற்றப்பட்ட ஞானப்புகழ்ச்சி பாடல் ஊர் மக்களால் இரவில் தொடங்கி விடிய விடிய பாடப்பட்டது.
அதிகாலை நிறைவு பெறும் பாடல் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்று நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதையும் படிங்க... அனைத்து மதத்தினரும் கலந்துகொண்ட சி.ஏ.ஏ. விளக்கப் பொதுக்கூட்டம்!