கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் இருந்து மான், காட்டு பன்றி, மிளா போன்ற காட்டு விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக மலை அடிவார பகுதிகளுக்கு அடிக்கடி வருவதுண்டு. இவ்வாறு வரும் காட்டு விலங்களை சமூக விரோதிகள் சிலர் வேட்டையாடுவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
மேலும், சிலர் மேற்கு தொடர்ச்சி மலை காட்டின் உள்ளே சென்றும் மிருகங்களை இறச்சிக்காகவும், பல மருத்துவத் தேவைகளுக்காகவும் வேட்டையாடிவருகின்றனர். இதனைத் தடுக்க குமரி மாவட்ட வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனிடையே ஆரல்வாய்மொழி அருகே மேற்கு தொடர்ச்சி மலை தென்மலை காப்பு காடுகளில் சந்தேகத்திற்க்கு இடமான வகையில் சட்ட விரோதமாக ஒரு கும்பல் வேட்டை நாயுடன் சென்றுக்கொண்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து காட்டுக்குள் சென்ற வனத்துறையினர் காப்பு காட்டின் மையப்பகுதியில் வைத்து வேட்டை நாயுடன் சுற்றி திரிந்த நான்கு பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிக்கப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரனை நடத்தியதில் காட்டுக்குள் வேட்டையாட வந்ததை ஒத்துக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து காட்டு மிருகங்களை வேட்டையாட வனத்துறை பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நுழைந்ததாக ராஜா, ஆபிரகாம் வீன்ஸ் , ஜேக்கப்பினோ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வனத்துறையினரின் ஜீப்பை விரட்டி முட்டித்தள்ளிய காட்டுயானை!