கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து தினமும் ஆயிரகணக்கான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கன்னியாகுமரியில் ஏராளமான நிரந்தர கடைகளும் சீசனை முன்னிட்டு 250-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது
இதனையடுத்து திறந்த வெளியில் அமைந்துள்ள உணவகங்கள், இளநீர் கடைகள், டீ கடைகள், பெட்டிக்கடைகள், ஐஸ்கிரீம் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் செந்தில்குமார், வட்டார உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் தங்கசிவம், பிரவீன்ரகு, சங்கரநாராயணன், குமாரபாண்டியன் ஆகியோர் கடற்கரை சாலை, மெயின் ரோடு, சன்னதி தெரு, காந்திமண்டப சாலை ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது உணவகங்கள், திண்பண்டங்கள் வியாபாரம் செய்யும் கடைகளில் காலாவதியான மற்றும் லேபிள் இல்லாத கடலை பாக்கெட், பேரீச்சம்பழ பாக்கெட், பொரிகடலை பாக்கெட் மற்றும் நறுமண பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் சுகாதாரமில்லாமல் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.