கன்னியாகுமரி அடுத்த மீனவ கிராமமான ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (35). இவரது மனைவி சகாய சிந்துஜா என்கிற சரண்யா (35). இவர்களுக்கு ரெய்னா என்கிற நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. சரண்யா அதே ஊரைச் சேர்ந்த அந்தோணிசாமி (40) என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். கடனை திருப்பிச் செலுத்துவதில் சரண்யாவுக்கும் அந்தோணிசாமிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது .
இதனையடுத்து சரண்யா மகன் ரெய்னா நேற்று காலை 11 மணி முதல் காணவில்லை. இதனால் அவர்கள் அந்தப் பகுதியில் தேடியுள்ளனர். ரெய்னா பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அவர்கள் கன்னியாகுமரி காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
விசாரணையில் அந்தோணிசாமி நேற்று காலை 10 மணி அளவில் சரண்யாவின் மகன் ரெய்னாவை பைக்கில் கடத்திக் கொண்டுசென்றதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதன்பேரில் கன்னியாகுமரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்தோணிசாமி மற்றும் ரெய்னாவை தேடிவந்த நிலையில் இன்று காலையில் கன்னியாகுமரி அடுத்த மணக்குடி கடற்கரை பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தென்தாமரைகுளம் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். மேலும் அந்த பகுதியில் காணாமல் போன சிறுவன் பற்றி விசாரித்தபோது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் சிறுவன் காணாமல் போனதாக புகார் கொடுத்து இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. கடனுக்காக சிறுவன் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.