கன்னியாகுமரி: மீன்பிடி தடைக்காலம் முடிந்த பிறகு கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்கள், நேற்று (ஜூன் 21) முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லத் தொடங்கினர்.
இனப்பெருக்க காலம்
ஏப்ரல், மே ஆகிய மாதங்கள், ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால், அந்த 61 நாள்கள் மீன்பிடிக்கத் தடைக்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 14ஆம் தேதி முடிவடைந்து. அன்றே தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்றனர்.
மீண்டும் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீனவர்கள் மட்டும் கரோனா தொற்று பரவாமல் இருக்க வேண்டியும்; ஊரடங்கு காரணமாகவும் ஜூன் 14ஆம் தேதி மீன்பிடிக்கச் செல்லாமல், ஒரு வாரம் கழித்துச் செல்ல முடிவுசெய்தனர்.
அதன்படி நேற்று (ஜூன் 21) சின்ன முட்டம் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க ஆழ்கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
கரை திரும்பிய மீனவர்கள்
இதையடுத்து தடைக்காலம் முடிந்து முதல் நாள் கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் கரை திரும்பினர். அவர்களுக்கு மஞ்சைபாறை, சாளை, ஊலாய், சீலா போன்ற ரக மீன்கள் கிடைத்துள்ளன.
ஊரடங்கு காரணமாக கேரள வியாபாரிகள் வருகை குறைவால் வருமானம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'யோகா நேபாளத்தில் உருவானது' - சர்மா ஒலி சர்ச்சை