கன்னியாகுமரி: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தரிசி புதுப்பானை, வெல்லம், மஞ்சள், கரும்பு ஆகியவை கொண்டு வீடுகள்தோறும் பங்களிப்பு கோயில்களிலும் பொங்கலிட்டும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே கேசவன் புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் திருப்பலியும் நற்கருணை ஆசியும், சிறப்பு பிரார்த்தனைகளும் நடக்கும் தேவாலயத்தில் பொங்கலோ பொங்கல் என்ற தமிழ் பண்பாடு குரலும் ஒலித்தது. இந்த தேவாலயத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றப்பட்டு நான்கு நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக நடக்கும் பிரார்த்தனைக்குப் பின்னர் பிரார்த்தனைக்கு வந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் இணைந்து தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி, பண்பாடு, கலை, கலாசாரம் சிதறாமல் குறையாமல் கரும்புகள் வைத்து மண்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினார்கள். பின்னர் சூரியனுக்கு படைத்தும் வழிபட்டனர். இன்று (ஜன.15) அதிகாலை அனைவரும் புத்தாடை அணிந்து, அங்குள்ள தேவாலயம் முன் கூடி ஏராளமான பானைகளில் சமத்துவப் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
உழவர் திருநாளை கொண்டாடும் இந்நாளில், விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. 56ஆவது ஆண்டாக பொங்கல் விழாவை கொண்டாடும் மீனவ மக்கள் பெண்களுக்கான விழிப்புணர்வு கோலப்போட்டியையும் நடத்தினர். இதில், ஏராளமான பெண்கள் குழுக்களாக பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில், போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து இடம்பெற்ற கோலம் அனைவரையும் கவர்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில், இக்கிராமத்தில் மட்டுமே பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாணவி ஒருவர் கூறுகையில், “56 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பொங்கல் விழா கொண்டாடுவதை பெருமையாக நினைக்கிறோம், கடற்கரை கிராம மக்கள் சார்பாக விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளைய தலைமுறையினர் விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: பொங்கல் திருநாள்! தமிழர் திருநாள் வாழ்க! வாழ்க! - அமைச்சர் பொன்முடி