தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பெனிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் சந்தேகமான முறையில் மரணம் அடைந்ததற்கு காவல் துறையினரின் தாக்குதல்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தையடுத்து, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து நாகர்கோவில் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் ரமேஷ் கூறுகையில்,
"தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் சிறைச்சாலையில் அடைக்க போலி சான்றிதழ் கொடுத்ததாக மருத்துவர், முறையாக விசாரணை செய்யாமல் சிறைச்சாலைக்கு அனுப்பிய குற்றவியல் நடுவர், சிறை அலுவலர்கள், காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்" என்று எச்சரித்தார்.
முன்னதாக, உயிரிழந்த தந்தை, மகனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, வேப்பமூடு சந்திப்பு அருகேவுள்ள குமரி மாவட்ட மொபைல் கடை உரிமையாளர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம் மற்றும் வணிகர் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தி, மவுன ஊர்வலத்தை நடத்தினர்.