பாரத ஜனதா கட்சியின் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் சுசீந்திரம் தெற்கு ரத வீதியில் நேற்று (ஜன.19) நடைபெற்றது. இதில், மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் பேசியதாவது: "இந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் வேலை தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல், குமரி நாடாளுமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை சந்திப்பதற்கு பாஜக தயார் நிலையில் உள்ளது. மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்திருப்பதை காணமுடிகிறது. தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாஜக கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியிடம் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடின் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிச்சயமாக மத்திய அரசு பரிசீலிக்கும். டெல்லியில் நடைபெறுவதை நான் விவசாயிகள் போராட்டமாக பார்க்கவில்லை. அந்த மூன்று சட்டமும் நிறைவேற்றப்பட்டால் தான் விவசாயிகளுக்கு சுதந்திர நாள்.
தமிழினத்திற்கு துரோகத்தைச் செய்து கொண்டிருந்த திமுக இன்றைக்கு ஒட்டு மொத்த இந்தியாவில் இருக்கும் விவசாயிகளுக்கும் துரோகம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழர்களுக்கு துரோகம் செய்த திமுகவை தமிழகத்தை விட்டே அகற்ற வேண்டும்.
குடியரசு தினம் என்பது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிய நாள். அன்று நாட்டை கவுரவப்படுத்துவார்களே தவிர அதனை குறைத்து விவசாயிகள் நடந்து கொள்ள மாட்டார்கள். இடைத்தரகர்கள் வேண்டுமானால் இந்த வேலையை செய்வார்கள்" என்றார்.