புதிய குற்றவியல் நடைமுறை விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் ஏழாம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துவதற்கும், வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழுவின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் செயற்குழுக் கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”புதிய குற்றவியல் நடைமுறை விதிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதின் காரணமாகவும் அந்த நடைமுறை விதிகளை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தியும் வரும் ஏழாம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளிலிருந்து விலகியிருப்பார்கள்.
மேலும், மார்ச் மாதம் எட்டாம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் திருச்சியில் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் சார்பில் மகளிர் வழக்கறிஞர் சங்க மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் வெளியில் செயல்படும் நுகர்வோர் நீதிமன்றம் நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது” என்று கூறினார்.
இதையும் படிங்க: ‘சிஏஏ சல்லடைப் போன்றது’ - கனிமொழி எம்பி