நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நல சங்கத்தின் செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத் தலைவர் பென்சிகர், மாநில தலைவர் குணசேகரன் உள்ளிட்ட மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர் குணசேகரன், "மாவட்டம் தோறும் உள்ள காவலர்களுக்கான கேன்டீன்களில் உயிர் காக்கும் மருந்துகளையும் விநியோகம் செய்ய வேண்டும் என்றார்.
மேலும், கேண்டீனில் உள்ள பணிகளை ஓய்வு பெற்ற காவலர்களுக்கே வழங்க வேண்டும் என்றும், பெண் காவலர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களை அரசு தனிக்கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.பல்வேறு தொழிலாளர்களுக்கு நலவாரியங்கள் செயல்படுவது போல ஓய்வு பெற்ற காவலர்களுக்காகவும் நலவாரியம் அமைத்து, செயல்படுத்த வேண்டும் என்றும், கேரளாவில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு அரசு வழங்கும் பணப் பலன்களைப் போல் தமிழக அரசும் வழங்க வேண்டும் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் ஓய்வு பெறும் காவலர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நியமனங்கள் இல்லை என்று கூறிய அவர், இது தொடர்பாக மாநில ஓய்வு பெற்ற காவலர் நல சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தமிழக அரசிடம் வழங்கப்பட்ட கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டி இந்தக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதாகத் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்க மாநில தலைவர் குணசேகரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "போகியில் பொருட்களை எரிக்க வேண்டாம்" சென்னை மாநகராட்சி புது முயற்சி!!