கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ், உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அடிக்கடி சென்று வருவது வழக்கம். இன்று மருத்துவமனைக்கு வாகனத்தில், திண்டிவனம் அருகில் சென்றுகொண்டிருந்த போது வாகன இருக்கையிலேயே நிலைகுலைந்து சரிந்தார். உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
கண்பார்வை மங்கிய நிலையில் சில மாதங்களாகச் சிகிச்சையிலிருந்து வந்த இவர், தற்போது தமாகா மாநில துணைத் தலைவராக இருந்தார். குமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதியில் குமாரதாஸ் 1984,1991இல் ஜனதா கட்சி சார்பிலும், 1996,2001இல் தமாகா சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது உடல் நலம் பாதிக்கப்படும் வரை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகத்திற்கு ஆதரவாகப் பரப்புரை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.