கன்னியாகுமரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் யானை, கரடி, மான், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்துவருகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் மலை அடிவாரத்தையொட்டி உள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி நுழைவது தொடர்கிறது.
இந்நிலையில், இரண்டு காட்டு யானைகள் உணவு, தண்ணீரைத் தேடி மலை அடிவாரத்தையொட்டி உள்ள சீதாப்பால் கிராமத்தில் பவுல் என்பவருக்குச் சொந்தமான தோப்புக்குள் புகுந்தது.
பின்னர் தோப்பிலிருந்த தென்னை மரம், மாமரம், பனைமரம், கொல்லாம்பழம் மரம் ஆகிய மரங்களை வேறோடு முறித்து போட்டு உணவு சாப்பிட்டதோடு தோப்பில் அருகே இருந்த குளத்தில் தண்ணீர் குடித்து கொண்டு இருந்துள்ளது.
இதைக் கண்டு தோப்பில் காவலுக்கு இருந்த காவலாளிகள் கூச்சலிட்டுள்ளனர். ஆனால், அதற்குள் யானைகள் அப்பகுதியிலிருந்து ஓடி மறைந்துவிட்டன. இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர் வனத் துறையினர்.
ஆனால், யானைகள் கூட்டம் மீண்டும் கிராமத்திற்குள் நுழைந்துவிடும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். மேலும் இதே பகுதியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கரடிகள் கூட்டம் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆராவாரமின்றி சாலைகளில் உலாவும் யானை