கன்னியாகுமரி : நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலையில் 2 திருடர்கள் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள மீட் தெருவில் பயன்பாட்டில் இல்லாமல் நீண்ட காலமாக பூட்டிய நிலையில் வீடு ஒன்று உள்ளது.
அந்தக் கட்டட வளாகத்தினுள் இரண்டு இளைஞர்கள் இன்று (நவ.23) உயிரிழந்து கிடப்பதாக வடசேரி போலீசாருக்கு அப்பகுதியினரால் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காவலர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்து கிடந்தது, பல்வேறு திருட்டு மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய கருங்கல் பகுதியை சேர்ந்த ராபர்ட், பறைக்கால்மடம் பகுதியை சேர்ந்த ஜாண்போஸ்கோ ஆகிய இருவர் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் அங்கு கட்டிங்பிளேயர் மூலம் ஒயர்களை வெட்டியுள்ளதும், அதேப்போன்று அப்பகுதியில் உள்ள மின்கம்ப நிலைநிறுத்தும் கம்பியையும் வெட்டி எடுக்கவும் முயற்சித்துள்ளனர்.
அதில் ஏற்கனவே செடிகொடிகள் படர்ந்து காணப்பட்டதால் அங்கிருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் இருவரும் சம்பவ இடத்தில் மின் கம்பி உடலில் சுற்றிய நிலையில் உயிரிழந்துள்ளதாக காவலர்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரது உடலையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு காவலர்கள் அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : இருசக்கர வாகனம் திருட்டு: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி