கன்னியாகுமரி: ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தில் குடிபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் மீனவர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ராஜக்கமங்கலம் துறை பகுதியைச் சேர்ந்தவர் மீன்பிடி தொழிலாளி அருள்தாசன்(59.) இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜன்(54) என்பவரும் நண்பர்கள்.
அருள்தாசன் உள்ளூரில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ராஜன் கன்னியாகுமரி பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ராஜன் அவ்வப்போது ஊருக்கு வரும்போது, அருள்தாசனுடன் சேர்ந்து இருவரும் ஒன்றாக மதுபானம் குடிப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இரவும்(செப்.12) அருள்தாசனும் ராஜனும் ஒன்றாக மது குடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் இருவரும் வீட்டுக்குத் திரும்பினர்.
பின்னர், அருள்தாசன் தன்னுடன் தகராறில் ஈடுபட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத ராஜன் தனது நண்பர்களான சூரி ஜான் (36), நோஸ்கோ (34) ஆகியோருடன் அருள்தாசனின் வீட்டுக்குச் சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட மோதலில் அருள்தாசனை ராஜன் கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த ராஜாக்கமங்கலம் காவல்துறையினர் அருள்தாசன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அருள்தாசனைக் கொலை செய்த ராஜன், அவரது நண்பர்களான சூரி ஜான், நோஸ்கோ ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.