உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தவும் அதனை முற்றிலும் ஒழிக்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மக்களிடையே விழிப்புணர்வும் அச்சமில்லா உணர்வும் சம அளவில் இருந்து வருகிறது.
இதனிடையே வாகனங்களில் வெளியே தேவையின்றி சுற்றி திரிந்த பொதுமக்களை பிடித்த காவல் துறையினர் அவர்களுக்கு நூதன தண்டனைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். நாளடைவில் பாதுகாப்பை பலப்படுத்திய காவல் துறை கைது, வாகனங்கள் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கடற்கரை பகுதிகள் அதிகம் கொண்ட மாவட்டமாக குமரி மாவட்டம் திகழ்வதால் கடல் வழியாக மீனவர்கள் வருவதாகவும் பொதுமக்கள் அச்சமின்றி வெளியே வருவதாகவும் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் 15 ட்ரோன் கேமராக்களை கொண்டு போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர்.
அதன்படி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி கடற்கரை பகுதிகள், ஆறு குளம் போன்ற பகுதிகளில் கூட்டமாக கூடி உல்லாச குளியல் போடும் இளைஞர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்த போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து செல்வதையும் போலீசாரை கண்டதும் விதி மீறல்களில் ஈடுபட்ட இளைஞர்கள் தலைதெறிக்க ஓடி ஒளியும் காட்சியையும் ட்ரோன் கேமரா பதிவு செய்து உள்ளது. இந்த கழுகு பார்வை காட்சிகளை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.