ஆயுஷ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளிக்கும் மத்திய அரசின் ஆணையைக் கண்டித்து இந்தியா முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், 250-க்கும் மேற்பட்ட பல் மருத்துவமனைகள் மற்றும் ரத்த ஆய்வகங்கள் இன்று (டிச. 11) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படாததால், நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இது குறித்து மருத்துவர் சுந்தர் நாராயணன் கூறியதாவது, "அலோபதி மருத்துவத்தில் நோய்க்கான அடிப்படை காரணத்தை தெரிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அறுவை சிகிச்சையின்போது மயக்கவியல் மருந்துகள் கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்த பகுதியில் உள்ள காயங்கள் ஆறுவதற்குத் தேவையான மருத்துவ வசதிகள் அலோபதியில் மட்டுமே உள்ளன.
மத்திய அரசின் இந்த ஆணையால் அலோபதி பற்றி தெரியாதவர்கள் சிகிச்சையளிக்கும் நிலை ஏற்பட்டு, அதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த மருத்துவத்தை மத்திய அரசு அங்கீகரிக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'விவசாயி என்னும் நான்' - எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகம் எடுபடுமா?