கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சுரேஷ்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்துக்கு பயனற்ற வகையிலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையிலும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் அச்சத்துடன் இந்த சாலைகளில் சென்று வருகிறார்கள் . சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையிலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை எடுத்துக் கூறியும், மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே நகரின் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட அனைத்து சாலைகளையும் உடனடியாக செப்பனிடாவிட்டால் குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வரும் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 15 ஆண்டுகளாக முடிவுக்கு வராத சாலை சீரமைப்பு - விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!