கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி இந்திரா நினைவு கூட்டு குடியிருப்பு பகுதியில் உள்ள திருவள்ளுவர் காலணியை சேர்ந்த தின கூலி தொழிலாளி சுபாஷ். இவரது மனைவி வேலம்மாள். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுபாஷ் தனது மனைவியின் சகோதரனான சண்முகத்திடம் வீட்டை பார்த்துக்கொள்ளும் படி கூறி விட்டு, தனது மனைவியை அழைத்து கொண்டு அந்தமான் நாட்டில் வேலைக்கு சென்றுள்ளார். சண்முகம் இந்த வீட்டை பராமரித்து வந்தார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகியும், முன்னாள் கவுன்சிலருமான முருகன் என்பவர் சுபாஷ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
இது குறித்து வீட்டை பாதுகாக்கும் சண்முகம் கேட்ட போது, பல்வேறு ஆவணங்களை காட்டி இது தன் வீடு என்றும் இனிமேல் இந்த வீட்டிற்கு யாராவது சொந்தம் கொண்டாடினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இது குறித்து சண்முகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் முருகனை பிடித்து ஆரல்வாய்மொழி காவல்துறையினர் விசாரித்தனர்.
இதில், முருகன் வீட்டை அபகரிக்க முயற்சித்தும், ஆவணங்கள் அரசு சீல்கள் போன்றவற்றை போலியாக தயாரித்து போலி பட்டா வைத்து இருப்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முருகனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் வேறு நபர்களின் வீட்டை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: OLX-இல் போலி செக் கொடுத்து கார் வாங்கிய நபர் கைது!