கன்னியாகுமரி: உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலில் தில்லுமுல்லு செய்து அதிமுக வேட்பாளரை வெற்றிபெற வைத்தது, உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுக ஒப்பந்தப்புள்ளி முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது குறித்தும், அதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளர் கிருஷ்ணகுமார் சமீபத்தில் பரபரப்பு ஒலிப்பதிவை வெளியிட்டிருந்தார்.
அந்த ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சூழலில் இன்று தோவாளை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் பூதப்பாண்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் தொடங்கியவுடன் திமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பூதலிங்கம் பிள்ளை , ராஜேஸ்வரி, ஞானபாய் இம்மானுவேல் ஆகியோர் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் நண்பர் கிருஷ்ணகுமார் வெளியிட்ட ஒலிப்பதிவைக் குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்தப் பணிகள் தொடர்பான முறைகேடுகளுக்கு விளக்கம் கேட்டனர்.
மேலும், தங்களுக்கு அந்த ஒப்பந்தப் பணிகளில் சந்தேகம் எழுந்துள்ளதால் விசாரணை நடத்தவேண்டும் எனவும், முறைகேடு செய்து வெற்றி பெற்ற தலைவரைக் கொண்டு கூட்டத்தை நடத்தக்கூடாது எனவும் வலியுறுத்தினர். அதையும் மீறி கூட்டம் தொடர்ந்த நிலையில், மூன்று கவுன்சிலர்களும் திடீரென தலைவரின் இருக்கைக்கு முன்பு தரையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட, சில நிமிடங்களிலேயே கூட்டத்தை முடித்து ஊராட்சி ஒன்றிய தலைவரும், அதிமுக கவுன்சிலர்களும் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறிய நிலையில் திமுக கவுன்சிலர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து அலுவலர்கள் திமுக கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது தகுந்த விசாரணை நடத்தித் தீர்வு காணப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.