கன்னியாகுமரி: கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் திரைப்பட இயக்குநர் பிடி செல்வகுமார் அரசுப் பள்ளிக்குக் கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் கமலஹாசன் அரசியல்வாதியும் தாண்டி மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர். மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேனோ, அதேபோல் அவரும் நினைக்கிறார். எங்களது சிந்தனை ஒரே நேர் கோட்டில் பயணிக்கிறது. அவரை மரியாதை நிமித்தமாகதான் சந்தித்தேன். அவருடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை.
நான் தேர்தலில் நிற்க வேண்டும் என்றால் இன்றைய சூழல் மாறவேண்டும். இப்போது உள்ள அனைவரும் எம்ஜிஆர் பெயரைக் கூறியும், கருணாநிதி பெயரைக் கூறியும், அண்ணாவின் பெயரைக் கூறி அவர்களது ஓட்டுகளைப் பெறுகின்றனர். யாரும் தங்களை முன்னிறுத்தி தங்களுக்கான ஓட்டை பெற முன்வரவில்லை.
தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியாகத் தேர்தல் நடைபெற வேண்டுமென்றால், தலைவர்களின் பெயரைச் சொல்லி ஓட்டு பெறுவதை நிறுத்தவேண்டும். கட்சிக் கொடிகளைப் பயன்படுத்தி ஓட்டு பெறுவதையும் நிறுத்த வேண்டும். தேர்தலின் அடிப்படையை மாற்ற வேண்டும். ஓட்டுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்று விட்டுச்சென்று விடுகின்றனர். இந்தப் போக்கு மாற வேண்டும்.
அதற்குத் தேர்தல் சட்டதிட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அதுவரை போராட தான் முடியுமே தவிரத் தேர்தலில் நிற்க முடியாது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் சகாயம் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம்” என்று கூறினார்.