கன்னியாகுமரி: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குளச்சல் உட்கோட்ட முகாம் அலுவலகம், தக்கலை மதுவிலக்கு காவல் நிலையம், கொற்றிகோடு காவல் நிலையம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். பின்னர் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற்ற போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு விழாவில் கலந்து கொண்டார்.
இதில் தோல்பாவை கூத்து, மாணவ - மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மொபைல் போன், ஆபரணங்கள், திருட்டு மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றை உரியவரிடம் ஒப்படைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காவலர்களுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில், "ஜூன் 26ஆம் தேதி, சர்வதேச போதை ஒழிப்பு நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி போன்ற பகுதிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பதைத் தடுக்க மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரே சுமார் 70 லட்சம் மாணவர்கள் சென்றடையும் விதத்தில் விழிப்புணர்வு செய்தார்கள். பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்பேரில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். அதே தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் இந்த விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
என்சிசி (NCC) மற்றும் என்எஸ்எஸ் (NSS) போன்ற மாணவர்கள் மூலமும் விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்படுகிறது. போதைப் பொருட்கள் டிமாண்டை குறைக்க விழிப்புணர்வு தான் செய்ய வேண்டும். மேலும் சப்ளையை குறைக்க காவல்துறை முயற்சி எடுத்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் போதைப்பொருள் விநியோகத்தைக் குறைக்க 28 ஆயிரம் வழக்குகள் போடப்பட்டு 27,474 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 54 டன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் போதைப் பொருள் வியாபாரிகளின் 80 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு, போதைப் பொருள் கடத்தப் பயன்படுத்தும் 2,761 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது 282 காவல் நிலைய எல்லைகளில் போதைப்பொருள் இல்லை எனப் போலீசார் கூறியுள்ளார்கள். போதைப்பொருள் ஒழிப்பில் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் போதைப் பொருட்களின் நடமாட்டம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணி இடைநீக்கமும், 10 பேர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது போதைப்பொருள் புழக்கம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களுக்குப் பாதுகாப்பிற்கான திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி முதலமைச்சர் துவங்கி வைத்தார். தற்போது அந்தத் திட்டம் பொதுமக்கள் மத்தியில் சரியாகச் சென்றடையவில்லை. அதனால் அதற்கான விழிப்புணர்வை ஏற்பட்டுத்தி வருகின்றோம். இந்தச் செயலியை அனைத்துப் பெண்களும் பதிவிறக்கம் செய்து வைக்க வேண்டும். காவல் உதவி செயலியை பெண்கள் உபயோகித்த உடனே அருகில் உள்ள காவல்துறை நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
தமிழ்நாடு காவல்துறையில் முதன்முறையாக காவலர்கள் பற்றாக்குறை இல்லை என்பது வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் 3-வது முறையாக காவலர் பணிக்கான தேர்வு நடக்கிறது. அதில் 600 பணியிடம் உள்ளது. தற்போது காவலர்களுக்காக பல பயிற்சி, பல நலத்திட்டங்களும் எடுக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: CM Breakfast Scheme: முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்ட உணவு பட்டியல் மாற்றம்!