குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகங்கள் நடைபெற்றது. குழந்தை பாக்கியம் வேண்டியும், குழந்தைகள் நோயின்றி வாழ வேண்டி நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் 1,691 குழந்தைகள் தூக்க நேர்ச்சைக்கு பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தூக்க நேர்ச்சை இன்று நடைபெற்றது. தூக்க வண்டியில் பொருத்தப்பட்டிருந்த இரு தூக்க கம்பங்களில் இரண்டு பேர் வீதம் ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகளுக்கு தூக்க நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. குழந்தைகளை நான்கு தூக்கக்காரர்கள் கையில் பற்றியவாறு கோயிலை சுற்றி அந்தரத்தில் வலம் வந்தனர்.
இவ்வாறு நான்கு குழந்தைகளுக்கு நேர்த்திக்கடன் முடிந்தவுடன் அடுத்ததாக உள்ள குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டன. கொல்லங்கோடு தூக்கத் திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும், பக்தர்களின் வசதிக்காக மார்த்தாண்டம், களியக்காவிளை, புதுக்கடை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலிருந்து கொல்லங்கோட்டுக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.