கன்னியாகுமரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், வயது வித்தியாசமின்றி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 55 வயதுக்கும் மேற்பட்ட ஊரக வேலை தொழிலாளர்களை கரோனா தொற்று எளிதில் பாதித்து விடும் என காரணம் கூறி மாவட்ட நிர்வாகம் கடந்த இரு மாதங்களாக அவர்களுக்கு வேலை வழங்க மறுத்து வருகிறது.
இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான 55 வயதுக்கும் மேற்பட்ட ஏழை தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு எந்தவித வருமானமுமின்றி வறுமையில் வாடி வருகின்றனர்.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும், கோரிக்கைகள் வைத்தும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே கடந்த இரு மாதங்களாக வேலை இழந்து தவிக்கின்ற ஊரக தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலைக்கான ஊதியத்தை நிவாரணமாக வழங்கிடவும், உடனடியாக இரண்டு மாத சம்பளத்தை அவர்களுக்கு கொடுக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நூதன முறையில் கைகளில் சட்டி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.