இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைக்க முயற்சித்து வருகிறது. தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதால் அவர்கள் விரும்புகிற சட்டத்தை நிறைவேற்றி வருகிறார்கள். மத்திய அரசு மூர்க்கத்தனமாக செயல்பட்டுவருகிறது.
பிரதமர் மோடி ஹிட்லர் பாணியில் செயல்பட்டு வருகிறார். அவரின் தவறான பொருளாதாரக் கொள்கையால் இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. சிறு, குறு தொழில்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. அதிலிருந்து மக்களை திசைத்திருப்ப பாஜக நாடாளுமன்றத்தில் தங்களுக்கிருக்கிற பெரும்பான்மையைத் தவறாகப் பயன்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை நிறைவேற்றிவருகிறது. இது மக்களைப் பிளவுபடுத்த பாஜக மோற்கொண்ட நடவடிக்கைகள்.
திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்னை குடும்பப் பிரச்னை. இதனால் இந்தக்கூட்டணி உடையும் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம். நடந்த முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுக செய்த முறைகேடுகள் ஒரு ஜனநாயகப் படுகொலை.
களியக்காவிளையில் வில்சன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதமோ இந்துத்துவ தீவிரவாதமோ எந்த தீவிரவாதத்தையும் மதச்சார்பற்ற இந்தியாவில் அனுமதிக்கமுடியாது. வில்சன் கொலை வழக்கில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஒரு கட்சிக்குத் தொடர்பு இருப்பதாக பொறுப்பற்ற முறையில் பேசுவது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல" என்றார்.
இதையும் படிங்க: பெரியார் குறித்த பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்: திருமாவளவன்