தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமடைந்துவருகிறது. இதனால் மருத்துவமனைகளில் அதிகளவிலான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், குமரி மாவட்ட ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வசதிகள் செய்யவில்லை என்றும், மருத்துவமனையில் முறைகேடுகள் நடப்பதாகவும் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''குமரி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் கரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் தங்கவைக்க முடியாத அளவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் இடமில்லாத காரணத்தால் தனியார் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கும் அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்யப்படுவதில்லை.
இதனிடையே புற நோயாளிகளுக்கு பாதிப்பு அதிகமாகியுள்ளது. பல நேரங்களில் நோயாளிகளைத் திருப்பியனுப்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. இதனால் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் உடனடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய வேண்டும்'' என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சோறு இல்லாமல் நாங்க பட்டினி கிடக்கிறோம்’ - வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரோனா நோயாளிகள்