கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் இலந்தை இளைஞர் இயக்கம் சார்பில் 28ஆவது ஆண்டு பொங்கல் விழாவும், அதனைத் தொடர்ந்து மாபெரும் மாட்டுவண்டி பந்தயமும் நடைபெற்றன. இப்போட்டி தட்டுவண்டி, வில்வண்டி ஆகிய இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டன.
இதில் தட்டுவண்டி போட்டிகளுக்கு குமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு தட்டுவண்டிப் போட்டியினைத் தொடங்கிவைத்தார். இதில் 24 தட்டுவண்டிகள் கலந்துகொண்டன.
மாட்டு பொங்கலன்று சங்கமிக்கும் நாட்டு மாடுகள்!
பின்னர் வில்வண்டி போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிக்கு குமரி மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செண்பகராமன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆஸ்டின் கலந்துகொண்டு வில்வண்டி போட்டியினைத் தொடங்கிவைத்தார். இதில் ஏழு வில்வண்டிகள் கலந்துகொண்டன.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இப்போட்டியானது ஆரல்வாய்மொழி - செம்பகராமன்புதூர் சாலையில் நடைபெற்றது. மாலை 4 மணியிலிருந்து போட்டி முடியும்வரை போக்குவரத்து மாற்றுப்பாதையில் விடப்பட்டது.
இவ்விழாவின் பாதுகாப்புக்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மட்டுமே நடைபெறும் இந்த மாட்டுவண்டி போட்டியைக் காண கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலுமிருந்து பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.