கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள அளூர் உச்சிமாகாளியம்மன் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன் நாராயணனின் மனைவி ஜமுனா (47). இவர் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார்.
அதில், “நான் வசித்து வரும் வீட்டின் அருகே புதிதாக ராம்குமார் - நிஷா வருணி என்ற தம்பதி குடி வந்தனர். இதில் ராம்குமார் என்பவர் ரயில்வேயில் உயர் பதவியில் இருப்பதாகவும், நிஷா வருணி என்பவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக இருப்பதாகவும் கூறினர்.
மேலும் ரயில்வேயில் அனைத்து பிரிவு அலுவலர்களும் எனக்கு நண்பர்கள் என்றும் அரசியல்வாதிகளும் என் தொடர்பில் இருப்பதாகவும் கூறிய ராம்குமார், நிறைய இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி கொடுத்திருப்பதாக கூறினார். அதேபோல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறைய பணியாளர்களை வேலைக்கு சேர்த்துள்ளதாக, அவரது மனைவி நிஷா வருணியும் கூறினார்.
இதனைக் கேட்ட நான், என் உறவு பையன் ஒருவருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தர அவரை அணுகினேன். இதற்காக 4 லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளேன். ஆனால் குறிப்பிட்ட நாளில் வேலை வாங்கி கொடுக்காததால், ராம்குமாரிடம் இது குறித்து கேட்டேன்.
அதற்கு அவர், ‘ரயில்வேயில் தனி நபருக்கு வேலை கிடைப்பது சிரமம். ஒரு குழுவாக கொண்டு வந்தால் அவர்களை பயிற்சி கொடுத்து வேலையில் எடுத்துக் கொள்வார்கள்’ என கூறினார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 22 பேர்களை சேர்த்து வேலைக்காக ராம்குமாரை தொடர்பு கொண்டார்கள்.
இவர்களிடம் இருந்து தலா நான்கு லட்சம் ரூபாய் வீதம், 23 நபர்களிடம் இருந்து மொத்தம் 92 லட்சம் ரூபாயை ராம்குமார் பெற்றுள்ளார். இந்நிலையில் குடியிருந்த வீட்டை விட்டு இரண்டு பேரும் காலி செய்துவிட்டனர். ஆகவே அவர்களை மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்" என குறிப்பிட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த தம்பதியை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இசைக்கலைஞர்களை குறிவைத்து வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் கைது கைது!