கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியனுக்கு கரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும், அவரது அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் சளி மாதிரி எடுத்து பரிசோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பொறியாளர்கள், டிரைவர்கள், மாநகராட்சி காவலாளிகள் என 35 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் டிஸ்லரி சாலையில் உள்ள மாநகராட்சி ஊழியர்கள் குடியிருப்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் கரோனா சோதனை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமாரியில் இதுவரை 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், நகரப் பகுதிகளில் தினசரி 600க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டுவருகிறது. இதுவரை மாவட்டத்தில் 278 பேர் காரோனா தொற்றிற்கு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.