கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க பலரும் தெருக்களில் அங்கும் இங்கும் சுற்றி வருகின்றனர்.
போதிய விழிப்புணர்வின்றியும் பாதுகாப்பின்றியும் தெருக்களில் மக்கள் செல்வதை கண்ட கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளர் டாக்டர். சுந்தர்சிங், தென்தாமரைகுளம் மற்றும் கொட்டாரம் தெருக்களில் முகக் கவசமின்றி வரும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தன்னார்வமாக முகக் கவசங்களை வழங்கி இந்த ஊரடங்கு நாட்களில் வீடுகளில் இருக்கவேண்டும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும், வந்தால் முகக் கவசங்களை அணிந்து வர வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
மேலும், அந்த பகுதிகளிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கும் முகக் கவசங்களை இலவசமாக வழங்கினார். அப்போது தென்தாமரைகுளம் அதிமுக பேரூர் செயலாளர் தாமரை தினேஷ், முன்னாள் பேரூராட்சி தலைவி பொன். பன்னீர்செல்வி மற்றும் பலர் உடனிருந்தனர்.
இதேபோன்று கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும நுண்ணறிவு பிரிவு காவலர் துரைசிங் தனது சொந்த செலவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகக் கவசங்களை தயார் செய்து கன்னியாகுமரி துணை கண்காணிப்பு அலுவலர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், கடலோர பாதுகாப்புக் குழும காவலர்கள் என அனைத்து காவலர்களுக்கும் இலவசமாக வழங்கினார்.
இதையும் படிங்க: திருச்சியில் ஊரடங்கு மீறல்: 300 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்