குமரி மாவட்டம், நாகர்கோவில் சிறையில் பணியில் இருந்த காவலர்கள், கைதிகள் என 18 பேருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குழித்துறை கிளை சிறையில் 35 வயது கைதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறையில் இருந்த கைதிக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, குழித்துறை கிளை சிறைச்சாலையில் உள்ள மேலும் 14 கைதிகள், காவலர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சிறுமி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனிடம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் அந்த காவல் நிலையத்தில் இருந்த பெண் காவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் காவல் நிலையம் மூடப்பட்டது. அதேசமயம் நாஞ்சில் முருகேசனிடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய, மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உட்பட மேலும் ஏழு காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.