கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 28 ஆயிரத்து 690 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது 54 பேர் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 86 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 8 ஆயிரத்து 929 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், சமீப காலமாக சென்னையில் வாகன போக்குவரத்து நிறுவனங்கள் நடத்தி வரும் சில தனியார் நிறுவனங்கள் போலி இ- பாஸ்களை தயார் செய்து ஒரு நபருக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்து அவர்களை குமரி மாவட்டத்திற்கு அழைத்து வருகின்றனர்.
இதுபோன்று போலி இ-பாஸ் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் வந்த வாகனம் ஒன்றை காவல்துறையினர் நேற்று (ஜூன் 13) ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் மடக்கிப் பிடித்தனர். இதில் வந்த பயணிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். வாகன ஓட்டுநர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் ரயில்வே ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ராபர்ட் புரூட்ஸ் கூறுகையில், ”கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் கரோனா தொற்று 16 பேருக்கு மட்டுமே இருந்தது. இந்நிலையில், சென்னையிலிருந்து அதிக அளவில் பயணிகள் போலி இ-பாஸ் மூலம் குமரிக்கு அழைத்து வரப்படுவதால் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, குமரி மாவட்டத்தில் இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் இன்று பேருந்து மூலம் விருதுநகர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் விருதுநகரிலிருந்து ரயில் மூலம் ஒடிசாவிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
இதையும் படிங்க: சின்ன வெங்காயத்தின் மவுசு கூடுமா? நம்பிக்கையோடு காத்திருக்கும் விவசாயிகள்!