கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்தும்வகையில் தற்போது அமலில் உள்ள எட்டாம் கட்ட ஊரடங்கு வருகிற 30ஆம் தேதி முடிவடைகிறது.
அக்டோபர் மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் ஆங்காங்கே சளி பரிசோதனை நடைபெற்றுவருகிறது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஐந்து நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் நாள்தோறும் குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
குமரி மாவட்டம் முழுவதும் மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை நடந்துள்ளது. அழகியபாண்டியபுரம் பகுதியில் 32 வயது இளம்பெண் உள்பட மூவர் உயிர் இழந்தனர்.
இளம்பெண்ணுக்கு வேறு சில உடல் உபாதைகளும் இருந்தன. இதில் மற்ற இருவரும் 60, 70 வயதான ஆண்கள். குமரியில் இதுவரை நோய்த்தொற்றுக்கு 228 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் இரண்டு பெண் காவலர்கள் உள்பட காவல் துறையினர் ஐவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல தக்கலையில் தீயணைப்பு வீரர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.