அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலைக்கல்லூரியின் 51ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில், கல்லூரி செயலாளர் ராஜன், முதல்வர் நீல மோகன் ஆகியோர் முன்னிலையில் மாணவ மாணவிகளுக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி பட்டங்களை வழங்கினார். இளங்கலை பட்டதாரிகள் 259 பேருக்கும் முதுகலை பட்டதாரிகள் 52 பேருக்கும் ஆய்வியல் நிறைஞர்கள் (எம்ஃபில் பட்டதாரிகள்) ஒன்பது பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. பின்னர், பேசிய துணைவேந்தர்,
'மாணவ-மாணவிகள் முதலில் நல்ல மனப்பான்மையுடன் இருத்தல் வேண்டும். மொழித்திறன் புதிய வார்த்தை புலமை புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றி அறியும் ஆர்வம், வாழ்க்கைத் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு செயலிலும் புதுமையைப் புகுத்த வேண்டும். புதிய சிந்தனைகளை சிந்தித்து அதை செயல்படுத்த முயற்சி செய்ய வேண்டும். வாழ்க்கையில் விடாமுயற்சி நிச்சயமாக இருத்தல் வேண்டும். கணினி உலகத்தில் ஏற்படும் தொழில் புரட்சிக்கு ஏற்றவாறு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் கூறும் குறைகளை படிக்கட்டுகளாக மாற்றிப் பழகினால் நிச்சயமாக உயர்ந்த இடத்தைப் பிடிக்க முடியும்' என்றார்.