கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், மெதுகும்மல் பகுதியைச்சேர்ந்தவர், சுனில். இவரது மகன் அஸ்வின் (11). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய அந்தச்சிறுவனுக்கு, அப்பள்ளியில் படித்த மற்றொரு மாணவன் குளிர்பானம் கொடுத்ததாகத் தெரிகிறது.
அந்த குளிர்பானத்தைக்குடித்த சிறுவனுக்கு, சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்நிலையில், அந்தச்சிறுவனுக்கு வாயில் புண் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் சோதனை செய்ததில் சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பெற்றோர் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து நெய்ற்றாங்கரையில் உள்ள மருத்துவமனையில் இரண்டு கிட்டினிகளும் செயல் இழந்து உயிருக்குப்போராடி வந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறை குற்றவாளிகளைக்கண்டுபிடிக்க முடியாததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்னும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காததால் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் படந்தாலுமூடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதால் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் போராட்டம் நடத்த காவல் துறையினர் அனுமதித்தனர்.
இதனையடுத்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர் பினுலால்சிங் தலைமையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் வாயில் கறுப்புத்துணி கட்டி தரையில் அமர்ந்து உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர்.
உயிரிழந்த சிறுவனின் தந்தை சுனில் போராட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர், ’தனது மகனின் உயிரிழப்புக்குக் காரணமானவர்களைக் கைது செய்யும் வரையிலும் உடலை வாங்க மாட்டோம். நாளை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு நீதி கிடைக்கும் வரை மனைவியுடன் காலவரையற்ற போராட்டம் நடத்துவேன்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மோடி தான் மிகப்பெரிய பொய்யர்; அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை எப்போது? - ஆம்ஆத்மி!