விவசாயிகள் அதிகம் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல், தென்னை, ரப்பர் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு இரு பருவங்களிலும் இம்மாவட்டத்தில் மழை பெய்யும். இங்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாசன குளங்கள் உள்ளன.
மேலும் நெல் பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் திறக்கப்படும். முன்னதாக கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படும். மழைநீரை சேமிக்க வசதியாக கோடை காலத்தில் குளங்கள் தூர்வாரப்படும்.
பின்னர், அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் கால்வாய்கள், குளங்கள் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் குளங்களில் தண்ணீர் சேமிக்க முடியாமல் வீணாகக் கடலில் கலக்கிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா விவசாயத்தை ஊக்குவிக்க அரசு மேற்கொண்டுள்ள குடிமராமத்துப் பணிகள் குறித்து பூதப்பாண்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார்.
அரசு பாசன குளங்கள், கால்வாய்கள் பராமரிப்பு நடக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும் நெல்லுக்கு அரசு நிர்ணயித்த விலை கிடைக்கவில்லையே? என விவசாயிகள் தெரிவித்தனர்.
ஆய்வுக் கூட்டத்திற்கு பின் தாழக்குடியில் பூதத்தான் குளத்தை ஆய்வு செய்து, அங்கு பனைமரக் கன்றுகளை நட்டனர். மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ள நிலையில், பணி முடிந்த குளத்தை மட்டும் காட்டி கண்காணிப்பு அலுவலரை அலுவலர்கள் ஏமாற்றியுள்ளனர் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.