கரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதைக் கட்டுபடுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவும், சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இதனால் கோயில் திருவிழாக்கள் சுப நிகழ்ச்சிகளை மட்டுமே நம்பி தங்களது வாழ்க்கையை நடத்திவரும் நாதஸ்வர, தவில் கலைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாகவே தங்களுக்கு வருடத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்களில்தான் வருமானம் கிடைக்கும் மாதங்கள். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட நாதஸ்வரம் தவில் கலைஞர்கள் சங்க நிர்வாகி பேசுகையில், தமிழ்நாடு அரசானது நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான நாதஸ்வர தவில் கலைஞர்கள் நலவாரியத்தில் இணையாமல் இருப்பதினால் அவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்களுக்கும் நலவாரியத்தின் மூலம் உதவித் தொகை வழங்கவேண்டும் என்றார்.
மேலும், அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையினை உயர்த்தி மூன்று மாதங்களுக்கும் தலா ஐந்தாயிரமாக வழங்க வேண்டும் என்ற அவர், ஊரடங்கின்போது நடைபெறும் திருமண நிகழ்வுகளில் ஒரு நாதஸ்வரம் மற்றும் ஒரு தவில் கலைஞரும் கலந்துகொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் பார்க்க:பரமத்தியில் வெற்றிலை, வாழை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!