குமரி மாவட்ட நாடாளுமன்றத் தொகுதி 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. வரும் 18ஆம் தேதி தேர்தல் முடிந்ததும் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாகக் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட உள்ளது.
இதற்காக அங்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலர் பிரசாந்த் வடநேரே, தேர்தல் பொது பார்வையாளர் காஜல் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் பிரசாந்த் வடநேரே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’குமரி மாவட்டத்தில் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வேட்பாளர்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்பட்டு உள்ளன. குறிப்பாகக் குமரி, கேரள எல்லைப் பகுதியான விளவங்கோடு வட்டம் பகுதிகளில் மட்டும் வாக்காளர்களின் வசதிக்காக இந்த தமிழ், மலையாள மொழிகளில் வேட்பாளர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக இதுவரை 116 புகார்கள் வந்ததில் 115 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.’ என்று அவர் கூறினார்.