உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள், இயேசு சிலுவையை சுமந்தபோது ஏற்பட்ட துன்பங்களை நினைவுகூரும் விதமாக 40 நாட்களுக்கு மேலாக நோன்பு இருப்பார்கள்.
இந்த நோன்பு காலத்தை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்று அழைக்கிறார்கள். தவக்காலம் சாம்பல் புதன் தினத்தன்று தொடங்கும். அதன்படி இந்தாண்டுக்கான சாம்பல் புதன் இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை குமரி மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் அனைத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
குறிப்பாக முக்கிய கத்தோலிக்க தேவாலயமான கோட்டாறு சவேரியார் தேவாலயத்தில், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு ஜெபித்தனர். இதனைத்தொடரந்து அங்கு கூடியிருந்தவர்களுக்கு நசரேன் சூசை சிலுவையிட்டு ஆசீர்வதித்தார். இந்தாண்டு, கிறிஸ்தவர்கள் 46 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக்கிறார்கள்.
இதையும் படிங்க: தெலங்கானாவில் நடைபெற்ற ஆசியாவின் மிகப் பெரிய ஆதிவாசி திருவிழா