கன்னியாகுமரி: சித்ரா பவுர்ணமியன்று சூரியன் அஸ்தமனமும், சந்திரன் உதயமும் ஒரேநேரத்தில் நிகழும். கன்னியாகுமரியில் நிகழும் இந்த அபூர்வ காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரியில் குவிந்தனர். இன்று (ஏப். 16) மாலை 6 மணிக்கு மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் வர்ணஜாலத்துடன் சூரியன் மஞ்சள் நிறத்தில் பந்து போன்ற வட்ட வடிவத்தில் கடலுக்குள் மறைந்தது. மேக மூட்டம் காரணமாக சூரியன் அஸ்தமனம் ஆகும் காட்சி சரிவர தெரியவில்லை.
கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடல் பகுதியில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்துக்கு மேல் பகுதியில் சந்திரன் நெருப்பு பந்து போன்ற வடிவத்தில் எழுந்தது. அப்போது கிழக்கு கடல் பகுதியில் உள்ள வானம் சந்திரனின் ஒளியால் பிரகாசமாக மின்னியது.
இந்த அரிய காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலி துறை கடற்கரைப்பகுதி, கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதியில் இருந்து, லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். சூரிய அஸ்தமனம் சரிவர தெரியாததால் மக்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.
சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில், காலை சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டு, அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் பழமையான நடராஜர் சிலையை விற்க முயன்ற மூவர் கைது