கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில், குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சித் திட்டம் தொடர்பாக இன்று (நவம்பர் 10) ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, ரூ. 268.58 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, "கன்னியாகுமரியில் ஒரே நாளில் 35 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் 43,410 பேர் பங்கேற்றனர். திருவனந்தபுரத்தில் இருந்து குமரி வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். சிற்றாறு, பேச்சிப்பாறை அணைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்த ஏரி, குளங்கள் குடிமராமத்துப் பணி மூலம் தூர்வாரப்பட்டன.
கல்குளம் - பாம்பூரி வாய்க்காலின் குறுக்கே தடுப்பணை, 30 இடங்களில் கடல் அலை தடுப்புச்சுவர் அமைக்கும் திட்டம் உள்ளது. அரசின் பரிசீலனையில் அகஸ்தீஸ்வரம் பழையாற்றில் இருந்து நெல்லை மாவட்டம் ராமநாதபுரத்துக்கு தண்ணீர் கொண்டுச் செல்ல நீரேற்று நிலையம் அமைக்கப்பட உள்ளது. குழித்துறை நகராட்சியில் ரூ. 31 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் நாகர்கோவிலில் ரூ. 76.04 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள நூறு மீனவர்களுக்கு செயற்கைகோள் தொலைபேசி வழங்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.