மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதுடன், விவசாயிகள் மீது போட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து பேச உள்ளோம்.
அதிமுக பாஜக அரசுகள், ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் கால்பந்தாட்ட விளையாட்டு போல நாடகம் ஆடுகின்றன. பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு, தற்போதுதான் கடன் பற்றியே கணக்கு எடுக்கிறார்கள். கூட்டுறவு வங்கிகளைவிட தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கிகளில்தான் பெரும்பான்மை விவசாயிகள் கடன் பெற்றுள்ளனர். எனவே அவற்றையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
வலுவான திமுக கூட்டணியை ரஜினியை வைத்து முறியடிக்கலாம் என பார்த்தார்கள். ஆனால் அது முடியவில்லை. எப்படிப்பட்ட கூட்டணி வைத்தாலும் அதிமுக வெற்றிபெற முடியாது. அதிமுக பாஜக கூட்டணியை முறியடிக்க திமுக கூட்டணியில் உள்ள நாங்கள், வரும் 20 ஆம் தேதி முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம். பிருந்தா காரத் நாகர்கோவிலில் வரும் 28 ஆம் தேதி பேசுகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்திருக்கிறோம்.
சசிகலாவால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதிமுகவிற்குள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால்தான் எடப்பாடி பழனிசாமி பதறுகிறார்” என்றார்.
இதையும் படிங்க: சசிகலாவை வரவேற்க பட்டாசுகள் கொண்டு வந்த காரில் தீ விபத்து